சனி, 11 மார்ச், 2017

சீறாபுராணத்தில் பெண்கள் பாத்திரப்படைப்பில் உமறுப்புலவரின் தனித்திறன்



                               
சீ.முரளி

முனைவர்பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை,

காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்,

இலாசுப்பேட்டை, புதுச்சேரி-605008 .     

                                             

                                            
                      சீறாபுராணத்தில்        

                               பெண்கள் பாத்திரப்படைப்பில்

                               உமறுப்புலவரின் தனித்திறன்



உமறுப்புலவரின் திறன்

ஒரு சமயத்தைச் சார்ந்தோ அல்லது ஓர் இனத்தைச் சார்ந்தோ ஒரு படைப்புப் படைக்கப்படும்போது பிற சமயத்தின் கருத்துக்கள் அதில் இடம்பெறுவது என்பது அரிதான ஒன்றே. அந்த வகையில் உமறுப்புலவர் சற்று வேறுபடுகின்றார். சீறாப்புராணம் என்பது இசுலாமியக் காப்பியம் என்னும் நிலையினைக் கடந்து, பிறசமய தெய்வங்களின் செய்திகளையும் குறிப்பிட்டுப் புதுமை புகுத்தியுள்ளார். அவ்வாறு குறிப்பிடும்போது நூல் தழுவிய சமயத்தினைப் பாதிக்காதவாறும், பிற சமயம் மற்றும் சமய தெய்வங்களையும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.

 நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்த பெண் பாத்திரங்களை வருணிக்க முடியாது என்பதனாலும், இசுலாமிய வரம்பு இத்தகைய வருaணனைக்குத் தடையாக அமைந்துள்ளது என்பதனாலும் உமறுப்புலவர் தம் தனித்திறனை நபிகள் காட்டிய அற்புதங்கள் ஒன்றினில் அமைத்துப் பாடுகிறார்.

தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த அற்புதம் :

திமிஷ்கு நாட்டு மன்னaன் ஹபீபு, தன்னுடன் ஒரு சதைக் கட்டியை எடுத்து வந்து, அதற்கு உயிர் கொடுத்து ஒரு பெண் உருவாக அமைக்கும்படி நபிகளிடம் கேட்டார். நபிகள் நாயகம் இறை ஆணைப்படி ஜம் ஜம் என்னும் கிணற்று நீரைத் தெளித்து இறைவனை இரந்து வேண்டினார். தசைக்கட்டி பெண் உருவாக மாறியது. அதை உமறுப்புலவர் சிறப்பாகப் பாடியுள்ளார்.

நபிகள் நாயகம் தசைக் கட்டியிலிருந்து உருவாக்கிய பெண்ணின் கேசாதி பாத வருணனையினை உமறுப்புலவர் கண்ணியத்துடன் பாடியுள்ளார். அந்தப் பாடலில் கண்ணைப் பற்றி மிகவும் சிறப்பாக வருணனை செய்துள்ளார்:

மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து

வரியளி யினைச்சிறைப் படுத்திக்

கடற்குளம் தேறாது அலைதரச் செய்து

கணைஅயில் கடைபடக் கறுவி

விடத்தினை அரவப் படத்திடைப் படுத்தி

மீனினம் பயப்படத் தாழ்த்திக்

திடக்கதிர் வடிவாள் எனக்கொலை பழகிச்

சிவந்துஅரி படர்ந்தமை விழியாள்- தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்-20

தசையிலிருந்து உருவான பெண்ணின் கண்கள் அவளது காதுகளை ஊடுருவித் தாக்கின; தலைமுடியினைத் தாழ்வுறச் செய்தன; வண்டுகளைச் சிறைப்படுத்தின; கடல்களிலும் குளங்களிலும் அலையை வற்ற செய்து; அம்பு, வேல் போன்ற கருவிகள் கோபத்தால் செயல்படாதவாறு செய்தன; நஞ்சினைப் பாம்பிடம் போக்கி, கெண்டை மீன் இனத்தை அஞ்சிடுமாறு தாழ்வுபடுத்தின; வாளை ஒப்பக் கொலைத் தொழிலைக் கற்றதாகி, சிவப்பு ஏறி வரிபடர்ந்த கண்களாயின என எந்த விதமான விரசமுமின்றி இசுலாமிய மரபை மீறாமல் அதே நேரத்தில் காப்பிய நயமும் குன்றாத வகையில், மேற்குறிப்பிட்ட பாடலில் பெண்ணின் கண்களை வருணித்துப் பாடியுள்ளார் உமறுப்புலவர்.

இவற்றில் பெண் வருணனையை  மரபு மீறாமலும், அதேநேரத்தில் செம்மையுறவும் அமைத்துக் காட்டியுள்ளார். பொதுவாகப் பெண்களை வருணிப்பது இசுலாமிற்கு ஏற்புடையது இல்லை என்பதை உணர்ந்து, பிறர் குறை சொல்லாதவாறு மிகவும் பக்குவமாகப் பாடியமை உமறுப்புலவரின் தனித்தன்மையாகும். பெண் பாத்திரங்களை நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு வருணித்தல் என்பது இசுலாமிய வரம்புக்கு மாறானது என்பதை அறிந்து, நபிகள் காட்டிய அற்புதங்கள் ஒன்றனுள் அமைத்துப் புதுமை படைத்துள்ளார் உமறுப்புலவர். அந்த வகையில் முடிவு எடுத்தல் என்னும் நிலையிலும் கூடத் தன்னைக் கைத்தேர்ந்தவராக நிலைநிறுத்தி சீறாப்புராணக் காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பது போற்றத்தக்கது.

உலாவில் புதுமை

சீறாப்புராணக் காப்பிய நாயகராம் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்கள் தம் திருமண நிகழ்ச்சியின்போது உலா போந்ததாகப் படைக்கின்றார் உமறுப்புலவர். குதிரையின் மீது முழுமதியெனத் திருமுகம் விளங்கித் தோன்ற நபிகள் நாயகம் அவர்கள் மணமகனாக நகர்வலம் வருகின்ற காட்சியைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களும் வீதிகள் தோறும் கண்டு களிக்கின்றனர்:

செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்

வழுவறு பவனியின் வருகின் றாரென

வெழுவகைப் பேதை பேரிளம்பெண் ஈறதாய்க்

குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினர்.      (மணம்புரி படலம்-51) 

வழக்கமாகத் தமிழ்க் காப்பியங்களிலும் உலா நூல்களிலும் தலைவன் உலா வருவதைக் காணும் பெண்கள் தன்நிலை மறந்து, தலைவன் மீது கொண்ட காதல் மிகுவதால் காமவயப்பட்டுப் புலம்புவதாக இலக்கியம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னர்க் குறிப்பிட்ட எழுபருவ மகளிரும்,  ஐந்துவயது சிறுமி தொடங்கி ஐம்பது வயது பேரிளம்பெண் ஈறாகப் பெண்கள் எல்லோரும் உலாப்போகும் தலைவன்மேல் காதல் கொண்டு காமுற்றுப் புலம்புவதாகப் பாடுவது தமிழ்ச் சிற்றிலக்கிய மரபு. உமறுப்புலவர் நபி பெருமானாரின் உலாக் காட்சிகளை அப்படிப் படைத்துக் காட்டாமல் மாற்றம் செய்து பண்பார்ந்த நிலையில் விவரிக்கின்றார். எழுபருவப் பெண்களும் நபிகளாரின் உலாவினைக் காண நிறைந்து கூடினர் என்று மட்டுமே குறிப்பிடும் உமறுப்புலவர் அவர்கள் காதல் வயப்பட்டதாகக் குறிப்பிடவில்லை. அந்த வகையில் தமிழ்மரபு கருதி எழுபருவப் பெண்களையும் உலாக் காண அழைத்துவரும் காப்பிய ஆசிரியர் மரபில் தேவைப்படும் மாற்றமாக அவர்களைப் பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்துகின்றார். உலாக்காணும் பெண்களின் பேச்சுக் கூட நாம் வழக்கமாகக் கேட்கும் பேச்சாக இல்லாமல் புதிய பேச்சாக புதுமையான பேச்சாக அமைகின்றது.  

இலட்சுமி

இலட்சுமியையும் காளியையும் கூட இசுலாமியத் தமிழ்க் காப்பியத்தில் இடம்பெறச் செய்துள்ளார் உமறுப்புலவர்,

  நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையார் கொடை அளிப்பதில் மேகம் போன்றவர். வீரமும் கல்வியும் வெற்றியும் மிக்கவர். செல்வம் பொருந்தியிருக்கும் அவரது வீட்டில் செல்வ நாயகியான இலட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வனசத்து

இலகு செல்வியும் இவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்

               (புகைறா கண்ட படலம்-2)                               எனப் பாடுகிறார்.



காளி

பாலை நிலத்தைப் பாடும்போது காளியின் சித்திரத்தினைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறார். காளியைப் பாலை நிலத்துக்குரிய கடவுளாகவும் பேய்களை அவளுடைய படைகளாகவும் பாடுவது தமிழ்மரபு. இதனையே உமறுப்புலவர்,

மூஇலை நெடுவேல் காளிவீற் றிருப்ப

முறைமுறை நெட்டுடல் கரும்பேய்

ஏவல்செய் துஉறைவது அலதுமா னிடர்கால்

இடுவதற்கு அரிது…                      (சுரத்தில் புனல் அழைத்த படலம்-8)

என்றவாறு பாடுகிறார்.

இந்தப் பாடலில் தமிழ்நாட்டில் கொற்றவை என்று போற்றி வணங்கப்படும் காளியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை நாம் காண முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் சாதி, மதம், இனம், மொழி, தெய்வம் போன்றவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு வகைபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மனிதன் என்பவன் ‘‘உலகில் வாழும் சமூக விலங்கு’’ என்னும் கருத்திற்கேற்ப இந்நூலாசிரியர்அனைவரும் சமம்என்பதை முன்னிறுத்தி பிற சமய தெய்வங்களான லட்சுமியையும், காளியையும் கூடத் தம்படைப்பில் படைத்துள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. ‘‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’’ என்னும் கருத்தைப் பறைசாற்றும் வகையில் பழந்தமிழரின் கொற்றவை வழிபாட்டினைத் தமிழ் மரபுப்படி இங்கே சுட்டியுள்ளமையும் நோக்கத்தக்கது.