தலித்
இலக்கியத் திறனாய்வு
தலித் சொல் விளக்கம்
தலித் எனும் சொல் தல் எனும் எபிரேய மொழிச்சொல்லிலிருந்து
வந்ததாகக் கருதப்படுகிறது.விவிலியத்தை இந்தியில் மொழிபெயர்க்கும் போது தல் என்ற எபிரேய
மொழிச்சொல்லுக்குத் தலித் எனும் சொல்லைப் பயன்படுத்தினர்.இதுவே மராட்டிய மொழிக்குச்
சென்று,அங்கிருந்து தமிழுக்கு இன்று வந்துள்ளது.தல் என்ற எபிரேய மொழிச் சொல் தமிழ்
விவிலியத்தில்ஏழைகள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தலித் என்ற சொல்லுக்கு மராட்டிய மொழியில் பள்ளம்
என்பது பொருளாகும்.ஓரத்திற்க்குத் தள்ளபட்டவர்களை டிப்ரஸ்டு என்ற சொல்லால் குறித்தது
போல,பள்ளத்தில் வீழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை தலித் எனும் சொல்லால்
குறித்தனர் மராட்டியர்.
கெய்ல் ஓம் வெல்த் என்பவர்,தாழ்த்தப்பட்டவர்கள்,மலைவாழ்
மக்கள் புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள்,நிலமற்றவர்கள்,ஏழை விவசாயிகள்,பெண்கள்,இறுதியாக
அரசியல் பொருளாதார ரீதியிலும்,மதத்தின் பெயராலும் சுரண்டப்படும் அனைவருமே தலித்துகள்தான்
என்று கூறுகின்றார்.
பொதுவுடைமைத்
தத்துவ அறிஞர் கோ.கேசவன் கூறும் போது தலித் எனும் மராத்தியச் சொல்லை,ஒடுக்கப்பட்ட சாதிகளைக்
குறிக்கும் தொகுப்புச்சொல்லாகவும்,போராடும் ஒடுக்கப்பட்ட வர்கங்களைக் குறிக்கும் தொகுப்புச்
சொல்லாகவும்,என இரண்டு பரிணாமங்களில் காணலாம் என்று கூறுகின்றார்.
1973-இல் தலித் சிறுத்தைகள் எனும் அமைப்பு தாழ்த்தப்பட்டவர்களை
தலித் மக்கள் என்று அடையாளப்படுத்தலாம் என அறிவித்தது.
சித்தலிங்கையா கூறும் போது,தலித் என்ற சொல் வேதனையின்
குறியீடாக இருக்க வேண்டுமே தவிர சாதியச் சொல்லாகச் சுருங்கி விடக் கூடாது , என்று கூறுகின்றார்.
தலித்
என்ற சொல் ,அவர்களால் அவர்களைக் குறிக்க உருவாக்கிய சொல் என்பது வரலாற்று செறிவு மிக்க
ஓர் உண்மை என்பதை மறந்து விடக்கூடாது.
சாதி அமைப்பின் மூன்று அடிப்படை தன்மைகளை அம்பேத்கர்
கூறுகின்றார்.
அவை
1.சமத்துவமின்மை 2.ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட ஒரு தொழில் சந்ததியினரும் அத்தொழிலையை
செய்து வர வேண்டும் 3.ஒரு பிரிவினர் வேறொரு பிரிவினராக மாற முடியாத நிலை.
தலித்
மக்களின் எழுச்சிக்குத் தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய டாக்டர் அம்பேத்காரின்
தலித் விடுதலைக்கான போராட்டச் சூழலை ஒட்டியே தலித் இலக்கியம் என்ற ஒரு பிரிவு முதலில்
மராட்டிய மொழியில் உருவாக வாய்ப்பாயிற்று எனக் கருதலாம்.
அம்பேத்கார் வழங்கிய நவின தலித்தியப் பார்வையை
முன்னிறுத்திப் புதிய இலக்கிய வடிவத்தினை மராட்டிய எழுத்தாளர்கள் கட்டமைக்க முயன்றனர்
என்கிறார் அர்ஜூன் டாங்ளே.1958இல் பம்பாயில் ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் முதல் மாநாடு
நடைபெற்றது.அம்மாநாட்டின் இறுதியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது என்னவெனில்,
மராத்தியில் ஒடுக்கப்பட்டோரால் எழுதப்பட்ட இலக்கியமும்,ஒடுக்கப்பட்டோர்
பற்றி மற்றவர்களால் எழுதப்பட்ட இலக்கியமும் தலித் இலக்கியம் என்ற தனித்தொரு அடையாளத்துடன்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.
இவ்வாறு
மராட்டிய மாநிலத்தில் தலித் இலக்கியம் உருவாகி தனக்கென ஓரிடத்தை பெற்ற பிறகுதான் கர்நாடகம்,குஜராத்,தமிழ்நாடு,தெலுங்கு
தேசம் முதலிய மாநிலங்களிலும் தலித் இலக்கியம் தோன்றி பரவத் தொடங்கியது.