சனி, 20 ஜூலை, 2019

சமரசம் இல்லாத சமூக அக்கறை: பாரதியார் கவிதைகளில் தேசப்பற்று

பாரதியார் கவிதைகளில் தேசப்பற்று:     சிறு வயது முதலே பாரதியார் தமிழ்மொழியின் மீது சிறந்த பற்று வைத்திருந்தார். அதுமட்டுமின்றி மொழிப்புலமையும் பெற்றிருந்தார். ஏழுவயதில்...

பாரதியார் கவிதைகளில் தேசப்பற்று



    சிறு வயது முதலே பாரதியார் தமிழ்மொழியின் மீது சிறந்த பற்று வைத்திருந்தார். அதுமட்டுமின்றி மொழிப்புலமையும் பெற்றிருந்தார். ஏழுவயதில் பள்ளியில் படித்து வரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கி, தன்னுடைய பதினோராம் வயதில் கவிப்பாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருடைய கவிப்புலமையைப் பாராட்டிய எட்டயபுர மன்னர் இவருக்குப் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ என அழைக்கப்பெற்றார். அவ்வாறு தன் கவிப்பயணத்தைத் தொடங்கிய பாரதி நாளடைவில் பெரும் புலமைமிக்க தமிழ் கவிஞராக உயர்வு பெற்று பின்னர், அடிமைப்பட்டிருந்த மக்களின் வாழ்வினில் புரச்சியினை ஏற்படுத்தி நல்வழி காட்டினார். இவர் உணர்ச்சிமிக்க தம் கவித்திறனால் இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூக அவலங்களைத் தெளிவுற எழுத்தினில் வடித்தார். இவரது காலத்திய நாட்டு நடப்பினை அறிந்திடாத மக்கள் யாவரும் இவரது படைப்பினை நன்குணர்ந்து படித்தால் இவர் காலத்தின் வரலாற்றினைக் கண்ணெதிரில் காணமுடியும். இந்திய விடுதலைக்குப் பெரும் பங்காற்றிய கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலை வீரர் என்று பல வடிவங்களில் திகழ்ந்தார். தம் தாய்மொழியான தமிழ்மொழியின் மீது இவர் அளவுகடந்த பற்றுக்கொண்டார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றிப் பாடியுள்ளார். இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்தக் காரணத்தினால் “தேசியக்கவி” ஆகப் போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனாக வலம் வந்தார். இவ்வாறு பெரும் பெருமைக்குரிய பாரதியார் தம் கவிதைகளில் எங்ஙனம் தேசப்பற்றைக் காண்பித்துள்ளார் என்பதை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

பாரதியின் தேசப்பற்று

     இந்தியதேசம் அடிமைப்பட்டிருந்த வேளையில் ஒரு மறுமலர்ச்சிக்காலம் தோன்றியது. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் புதுத்திருப்பம் கண்ட பெருமைமிக்க காலமாக அது அமைந்தது. சுவாமி விவேகானந்தர் முதலிய சமயப் பெரியோர்கள், ராஜாராம் மோகன்ராய் முதலிய சமூக சீர்திருத்தவாதிகள், கோபாலகிருஷ்ண கோகலே முதலிய அரசியல் அறிஞர்கள் என அனைவரும் இம்மறுமலச்சிக்குப் பெரிதும் பணிபுரிந்துள்ளனர். லோகமான்ய திலகர், விபின்சந்திரபாலர், தாதாபாய் நௌரோஜி முதலியவர்கள் அரசியல் விடுதலை இயக்கத்திற்கு வித்திட்டனர். இந்த விடுதலை இயக்கம் மகாத்மாகாந்தி தொடங்கிய ஒரு வித்தியாசமான நாட்டு விழிப்புணர்ச்சியால் தனிவடிவம் பெறலாயிற்று. இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழ் நாட்டில் தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதி தோன்றினார். அவர் தனது எழுச்சிமிக்க கவிதைகளால் தமிழ்நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சியைத் தட்டி எழுப்பினார். நாட்டில் தேசியக்கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய வேளையில்தான் பாரதியார் வீருணர்ச்சிகொண்டு கொதித்தெழுந்தார்.
     சீருடனும் சிறப்புடனும் வாழவேண்டிய பாரத சமுதாயம் அந்நியரின் ஆதிக்கப்பிடியில் சிக்கிச் சிதைந்து சீரழிந்துக் கிடப்பதைப் பாரதி கண்டு கண்ணீர் மல்கிப் பாடினார்.

“வலியிமையற்ற தோளினாய்
மார்பிலே ஒடுங்கினாய்
பொலிவிலா முகத்தினாய்
பொறியிழந்த விழியினாய்
ஒலியிழந்த குரலினாய்
ஒளியிழந்த மேனினாய்
கிலிபிடித்த நெஞ்சினாய்”

இதுமட்டுமின்றி, மேலும் மனம் நொந்து பாடுகிறார்.

“அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக் கோர்கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ”

என்று அன்றிருந்த எதார்த்த நிலையைப் பாரதி இவ்வாறு வர்ணிக்கிறார். நாடு இந்த நிலையில் இருப்பதை அவருடைய உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் வெறுத்தது. நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனித்தார். தீவிரமாகச் சிந்தித்தார். பாரதம் உன்னத சமுதாயமாக உருவாக வேண்டுமானால் முதலில் தாய்த்திருநாடு சுதந்திரம் பெறவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார். அதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார். ஆனால் சாதாரண மக்கள் இந்தச் சுதந்திரப்போரின் அவசியத்தை உணராதவர்களாக இருந்தார்கள். காரணம், அப்போதைய மக்கள் உணர்ச்சியும் எழுச்சியும் கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லை. பசியினாலும் பட்டினியாலும் வாடும் மக்களை பாரதி நேரில் கண்டார;. அந்த அவலநிலையை இரண்டே அடிகளில் மனம் வருந்திப் பாடுகிறார்.

“கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்”

மக்களுடைய வறுமையையும் அறியாமையையும் ரத்தினச் சுருக்கமாக இவ்வாறு எடுத்துரைத்தார்.

மக்களின் தேசிய உணர்ச்சி மழுங்கிப்போய்க் கிடப்பதையும் சுதந்திரதாகம் உறைந்து போய்க்கிடப்பதையும் கண்ட பாரதி, வௌ்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள அத்தனை கோடி மக்களும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும், சுதந்திர இயக்கம் பரந்து விரிந்த ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என்று உணர்ந்தார். எனவே, நாட்டு மக்கள் அனைவரையும் விழிப்படையச்செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

     சுதந்திரத்தை உயிராகவும் விடுதலை வேட்கையை மூச்சாகவும் கொண்ட அவருடைய பாடல்களில் ஒரு புது இயக்கத்தின் ஊக்கமும் எழுச்சியும் காணப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட நாட்டின், வாய்விட்டுச் சொல்ல முடியாதிருந்த ஆசைகள் பாரதியின் மூலம் குரல் கொடுத்தன.

முதலாவதாக,

“வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”

என்று ஆரம்பித்தார்.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்னும் ஒரு முனிவர் உபதேசித்த மந்திரச்சொல்தான் “வந்தேமாதரம்”. நமது மகாகவியின் திருநாவில் விளையாடிய மந்திரமும் இதுவே. “நாட்டுத் தாய்க்கு வணக்கம்” என்னும் பொருள்படும் பங்கிம் சந்திரரின் வந்தேமாதரப் பாட்டை பாரதியின் கவிச்சொல் இன்னும் அழகுபடுத்துகிறது. ஒருமைப்பாட்டை மிகவும் வலியுறுத்துகிறது.

“ஜாதி மதங்களைப் பாரோம்”

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”

என்ற தாரக மந்திரங்கள் இப்பாட்டில் உண்டு.

“ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல் என்னநீதி-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ”

என்று குரல் எழுப்பி,

“எப்பதம் வாய்த்திடுமேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்-வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்”

என்று ஒருமைப்பாட்டை உயர்த்திப் பாடுகிறார்.

“தாயின் மணிக்கொடி பாரீர்” என்ற பாடலில் பாரத நாட்டிலிருக்கும் பல்வேறு தேசிய இனங்களையும் ஒரு கொடியின் கீழ் ஒன்று சேர்க்கிறார்.

“செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்
கன்னடர் ஒட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடை யார் இந்து ஸ்தானத்து மல்லர்
பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறை வரும் கீர்த்திகொள் ரஜபுத்ரவீரர்”

“பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும்
சேர்ந்ததைக் காப்பது காணீர்”

இப்படி தேசிய இனத்தார்களைத் தட்டி எழுப்பி, ஒன்றாகத் திரட்டி, அணி அணியாகக் கொடியின் கீழ் கொண்டு வந்து நிறுத்தி,

“கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்”

என்று அவர்களுடைய உறுதியையும் ஒற்றுமையையும் சித்திரமாகக் காட்டுகிறார்.
ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சும், களி படைத்த மொழியும்  கடுமைகொண்ட தோளும் உடைய இளைய பாரதத்தினரை வாழ்த்தி அழைக்கும்போது,

“ஒற்றுமைக் குளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா”

என்கிறார்.

     தேசபக்தியும் ஒருமைப்பாட்டு உணர்வும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாதபடி அவை பாரதியின் பாடல்களில் ஊடும் பாவுமாக இழையோடக் காணலாம்.

மேலும் தமிழகத்தைப் பற்றிப் பாடும்போதெல்லாம் பாரதத்தையும் இணைத்துப் பாட அவர் தவறியதில்லை.

“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்”

என்று அடி எடுத்தவர், அடுத்த வரியில்

“வாழிய பாரத மணித்திருநாடு”

என்றும் வாழ்த்துகிறார்.

“தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா”

என்றவர், அடுத்து

“அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”

என்றும் பாடுகிறார்.

பிஞ்சு உள்ளங்களிலே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வித்திட வேண்டும் என்று விரும்பிய மகாகவி, பாப்பா பாட்டில் தொடர்கிறார்.

“வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா”

என்று பாடுகிறார். 

இவ்வாறாக பாரதியின் தேசப்பற்று உணர்வினை அவரது கவிதைகள் தெளிவுறக் காட்டுகின்றன.

“பாரதப் பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்”

என்ற மகாகவியின் சொல்லை நினைவில் கொண்டு அனைவரும் பாரதம் செழிக்கப் பாடுபடுவோம்.

நிறைவுரை

     பாரதியார் உலக உயிர்கள் அனைத்தையும் பரந்த மனம் கொண்டு நேசித்துள்ளார். பாரத நாட்டின் விடுதலை மட்டுமின்றி பாரத நாட்டு மக்களின் மீதும் அக்கரைகொண்டு நல்லறிவு புகட்டியுள்ளார். மேலும் தம் தாய்மொழியான தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் தமிம்நாட்டு மக்களின் மீதும் தீராத பற்று கொண்டு விளங்கியதை நம்மால் காண முடிகிறது. இவ்வாறு பாரதி விரும்பிய மற்றும் அவர் காட்டிய தேசபற்று அனைத்து மக்களுக்கும் உருவாகும் வண்ணம் செயல்பட்டு ஒற்றுமையுடன், நாம் அனைவரும் வாழ்வோம். அவரது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வோம்.

பயன்பட்டவை
1.   வரதராஜன்.மா.(தொகு.ஆசி).,       - பாரதி பார்வையில்
  சென்னை : அபிராமி பப்ளிகேஷன்ஸ்
  முதற்பதிப்பு : 1982.

2.   இராமநாதன். விகரு.,            - மகாகவி பாரதியார் கவிதைகள்
  சென்னை : ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
  பத்தொன்பதாம் பதிப்பு : 2014, 1990.  

சனி, 11 மார்ச், 2017

சீறாபுராணத்தில் பெண்கள் பாத்திரப்படைப்பில் உமறுப்புலவரின் தனித்திறன்



                               
சீ.முரளி

முனைவர்பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை,

காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்,

இலாசுப்பேட்டை, புதுச்சேரி-605008 .     

                                             

                                            
                      சீறாபுராணத்தில்        

                               பெண்கள் பாத்திரப்படைப்பில்

                               உமறுப்புலவரின் தனித்திறன்



உமறுப்புலவரின் திறன்

ஒரு சமயத்தைச் சார்ந்தோ அல்லது ஓர் இனத்தைச் சார்ந்தோ ஒரு படைப்புப் படைக்கப்படும்போது பிற சமயத்தின் கருத்துக்கள் அதில் இடம்பெறுவது என்பது அரிதான ஒன்றே. அந்த வகையில் உமறுப்புலவர் சற்று வேறுபடுகின்றார். சீறாப்புராணம் என்பது இசுலாமியக் காப்பியம் என்னும் நிலையினைக் கடந்து, பிறசமய தெய்வங்களின் செய்திகளையும் குறிப்பிட்டுப் புதுமை புகுத்தியுள்ளார். அவ்வாறு குறிப்பிடும்போது நூல் தழுவிய சமயத்தினைப் பாதிக்காதவாறும், பிற சமயம் மற்றும் சமய தெய்வங்களையும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார்.

 நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்த பெண் பாத்திரங்களை வருணிக்க முடியாது என்பதனாலும், இசுலாமிய வரம்பு இத்தகைய வருaணனைக்குத் தடையாக அமைந்துள்ளது என்பதனாலும் உமறுப்புலவர் தம் தனித்திறனை நபிகள் காட்டிய அற்புதங்கள் ஒன்றினில் அமைத்துப் பாடுகிறார்.

தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த அற்புதம் :

திமிஷ்கு நாட்டு மன்னaன் ஹபீபு, தன்னுடன் ஒரு சதைக் கட்டியை எடுத்து வந்து, அதற்கு உயிர் கொடுத்து ஒரு பெண் உருவாக அமைக்கும்படி நபிகளிடம் கேட்டார். நபிகள் நாயகம் இறை ஆணைப்படி ஜம் ஜம் என்னும் கிணற்று நீரைத் தெளித்து இறைவனை இரந்து வேண்டினார். தசைக்கட்டி பெண் உருவாக மாறியது. அதை உமறுப்புலவர் சிறப்பாகப் பாடியுள்ளார்.

நபிகள் நாயகம் தசைக் கட்டியிலிருந்து உருவாக்கிய பெண்ணின் கேசாதி பாத வருணனையினை உமறுப்புலவர் கண்ணியத்துடன் பாடியுள்ளார். அந்தப் பாடலில் கண்ணைப் பற்றி மிகவும் சிறப்பாக வருணனை செய்துள்ளார்:

மடற்குழை கிழித்துத் தடக்குழல் குழைத்து

வரியளி யினைச்சிறைப் படுத்திக்

கடற்குளம் தேறாது அலைதரச் செய்து

கணைஅயில் கடைபடக் கறுவி

விடத்தினை அரவப் படத்திடைப் படுத்தி

மீனினம் பயப்படத் தாழ்த்திக்

திடக்கதிர் வடிவாள் எனக்கொலை பழகிச்

சிவந்துஅரி படர்ந்தமை விழியாள்- தசைக்கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்-20

தசையிலிருந்து உருவான பெண்ணின் கண்கள் அவளது காதுகளை ஊடுருவித் தாக்கின; தலைமுடியினைத் தாழ்வுறச் செய்தன; வண்டுகளைச் சிறைப்படுத்தின; கடல்களிலும் குளங்களிலும் அலையை வற்ற செய்து; அம்பு, வேல் போன்ற கருவிகள் கோபத்தால் செயல்படாதவாறு செய்தன; நஞ்சினைப் பாம்பிடம் போக்கி, கெண்டை மீன் இனத்தை அஞ்சிடுமாறு தாழ்வுபடுத்தின; வாளை ஒப்பக் கொலைத் தொழிலைக் கற்றதாகி, சிவப்பு ஏறி வரிபடர்ந்த கண்களாயின என எந்த விதமான விரசமுமின்றி இசுலாமிய மரபை மீறாமல் அதே நேரத்தில் காப்பிய நயமும் குன்றாத வகையில், மேற்குறிப்பிட்ட பாடலில் பெண்ணின் கண்களை வருணித்துப் பாடியுள்ளார் உமறுப்புலவர்.

இவற்றில் பெண் வருணனையை  மரபு மீறாமலும், அதேநேரத்தில் செம்மையுறவும் அமைத்துக் காட்டியுள்ளார். பொதுவாகப் பெண்களை வருணிப்பது இசுலாமிற்கு ஏற்புடையது இல்லை என்பதை உணர்ந்து, பிறர் குறை சொல்லாதவாறு மிகவும் பக்குவமாகப் பாடியமை உமறுப்புலவரின் தனித்தன்மையாகும். பெண் பாத்திரங்களை நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு வருணித்தல் என்பது இசுலாமிய வரம்புக்கு மாறானது என்பதை அறிந்து, நபிகள் காட்டிய அற்புதங்கள் ஒன்றனுள் அமைத்துப் புதுமை படைத்துள்ளார் உமறுப்புலவர். அந்த வகையில் முடிவு எடுத்தல் என்னும் நிலையிலும் கூடத் தன்னைக் கைத்தேர்ந்தவராக நிலைநிறுத்தி சீறாப்புராணக் காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பது போற்றத்தக்கது.

உலாவில் புதுமை

சீறாப்புராணக் காப்பிய நாயகராம் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்கள் தம் திருமண நிகழ்ச்சியின்போது உலா போந்ததாகப் படைக்கின்றார் உமறுப்புலவர். குதிரையின் மீது முழுமதியெனத் திருமுகம் விளங்கித் தோன்ற நபிகள் நாயகம் அவர்கள் மணமகனாக நகர்வலம் வருகின்ற காட்சியைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களும் வீதிகள் தோறும் கண்டு களிக்கின்றனர்:

செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்

வழுவறு பவனியின் வருகின் றாரென

வெழுவகைப் பேதை பேரிளம்பெண் ஈறதாய்க்

குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினர்.      (மணம்புரி படலம்-51) 

வழக்கமாகத் தமிழ்க் காப்பியங்களிலும் உலா நூல்களிலும் தலைவன் உலா வருவதைக் காணும் பெண்கள் தன்நிலை மறந்து, தலைவன் மீது கொண்ட காதல் மிகுவதால் காமவயப்பட்டுப் புலம்புவதாக இலக்கியம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னர்க் குறிப்பிட்ட எழுபருவ மகளிரும்,  ஐந்துவயது சிறுமி தொடங்கி ஐம்பது வயது பேரிளம்பெண் ஈறாகப் பெண்கள் எல்லோரும் உலாப்போகும் தலைவன்மேல் காதல் கொண்டு காமுற்றுப் புலம்புவதாகப் பாடுவது தமிழ்ச் சிற்றிலக்கிய மரபு. உமறுப்புலவர் நபி பெருமானாரின் உலாக் காட்சிகளை அப்படிப் படைத்துக் காட்டாமல் மாற்றம் செய்து பண்பார்ந்த நிலையில் விவரிக்கின்றார். எழுபருவப் பெண்களும் நபிகளாரின் உலாவினைக் காண நிறைந்து கூடினர் என்று மட்டுமே குறிப்பிடும் உமறுப்புலவர் அவர்கள் காதல் வயப்பட்டதாகக் குறிப்பிடவில்லை. அந்த வகையில் தமிழ்மரபு கருதி எழுபருவப் பெண்களையும் உலாக் காண அழைத்துவரும் காப்பிய ஆசிரியர் மரபில் தேவைப்படும் மாற்றமாக அவர்களைப் பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்துகின்றார். உலாக்காணும் பெண்களின் பேச்சுக் கூட நாம் வழக்கமாகக் கேட்கும் பேச்சாக இல்லாமல் புதிய பேச்சாக புதுமையான பேச்சாக அமைகின்றது.  

இலட்சுமி

இலட்சுமியையும் காளியையும் கூட இசுலாமியத் தமிழ்க் காப்பியத்தில் இடம்பெறச் செய்துள்ளார் உமறுப்புலவர்,

  நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையார் கொடை அளிப்பதில் மேகம் போன்றவர். வீரமும் கல்வியும் வெற்றியும் மிக்கவர். செல்வம் பொருந்தியிருக்கும் அவரது வீட்டில் செல்வ நாயகியான இலட்சுமி பெருமையோடு அமர்ந்திருக்கிறாள்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வனசத்து

இலகு செல்வியும் இவர்மனை முன்றில்வீற் றிருந்தாள்

               (புகைறா கண்ட படலம்-2)                               எனப் பாடுகிறார்.



காளி

பாலை நிலத்தைப் பாடும்போது காளியின் சித்திரத்தினைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறார். காளியைப் பாலை நிலத்துக்குரிய கடவுளாகவும் பேய்களை அவளுடைய படைகளாகவும் பாடுவது தமிழ்மரபு. இதனையே உமறுப்புலவர்,

மூஇலை நெடுவேல் காளிவீற் றிருப்ப

முறைமுறை நெட்டுடல் கரும்பேய்

ஏவல்செய் துஉறைவது அலதுமா னிடர்கால்

இடுவதற்கு அரிது…                      (சுரத்தில் புனல் அழைத்த படலம்-8)

என்றவாறு பாடுகிறார்.

இந்தப் பாடலில் தமிழ்நாட்டில் கொற்றவை என்று போற்றி வணங்கப்படும் காளியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை நாம் காண முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் சாதி, மதம், இனம், மொழி, தெய்வம் போன்றவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு வகைபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மனிதன் என்பவன் ‘‘உலகில் வாழும் சமூக விலங்கு’’ என்னும் கருத்திற்கேற்ப இந்நூலாசிரியர்அனைவரும் சமம்என்பதை முன்னிறுத்தி பிற சமய தெய்வங்களான லட்சுமியையும், காளியையும் கூடத் தம்படைப்பில் படைத்துள்ளமை இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. ‘‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’’ என்னும் கருத்தைப் பறைசாற்றும் வகையில் பழந்தமிழரின் கொற்றவை வழிபாட்டினைத் தமிழ் மரபுப்படி இங்கே சுட்டியுள்ளமையும் நோக்கத்தக்கது.